டிராக்டரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து கண்டெய்னர் லாரி சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது கண்டெய்னர் லாரியும் அவ்வழியாக வந்த டிராக்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. மேலும் கண்டெய்னர் லாரி சாலையோரம் நின்ற கார் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த டிராக்டர் ஓட்டுனரான ரங்கராஜன் என்பவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான டிராக்டர் மற்றும் காரை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து நடந்த போது காரில் ஆட்கள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.