இந்தியாவில் ஏடிஎஸ் என்ற கொசு வகையினால் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற பல அறிகுறிகள் தென்படும். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா எண்ணிக்கை குறைவது மற்றும் உடல் உறுப்புகள் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். அது மட்டுமல்லாமல் ரத்த அணுக்களின் அளவு குறைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவி வந்த நிலையில் சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளால் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தது. தற்போது வட மாநிலங்களில் டெங்கு பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு இந்தியாவில் விரைவில் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு எதிரான தடுப்பூசியை இந்திய இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் உருவாக்கி வருவதாகவும் இதற்கான முதல் கட்ட பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.