சென்னையைச் சேர்ந்த 17 வயதான பிரியா, தேசிய அளவிலான கால்பந்து வீராங்கனை. வலதுகால் மூட்டு சவ்வில் இருந்த பிரச்னைக்காக கொளத்தூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்றார். அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியாவின் கால் அகற்றப்பட்டது. தொடர் கண்காணிப்பில் இருந்த பிரியா, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இந்த நிலையில் வீராங்கனை பிரியாவின் மரணம் குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கமளித்துள்ளார். சர்ஜரிக்குப் பின் ரத்த ஓட்டம் தடைபட்டதால், அவருக்கு சிறுநீரகம், ஈரல், இதயம் ஆகியவை பாதிக்கப்பட்டதாகவும், மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பிரியா இறந்துவிட்டதாகவும் கூறிய அவர், பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.