தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வடக்கு மாவட்ட தலைவர் கலைவாணி விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அந்த கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போட்டி போட்டு விலை உயர்த்தி வருகின்றனர். மத்திய அரசு விலையை குறைத்தாலும் விலையை குறைக்காத ஒரே மாநிலம் தமிழகம் தான். தமிழகத்தில் கனிம வள கொள்ளை திருட்டு அதிகரித்து வருகிறது. 16 மாதங்களில் இந்த ஆட்சி செய்த ஒரே சாதனை விலை உயர்வு தான். இந்தியாவில் தமிழகம் முதல்வர் போல் விளம்பரம் முதல்வர் யாருமில்லை. முதல்வருக்கு விளம்பரமோனியோ நோய் வந்துள்ளது.
அதனை தொடர்ந்து சென்னை மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் முதல்வர் குடும்பத்துடன் ‘லவ் டுடே’ படத்தை பார்க்கிறார். தமிழகத்தில் வெளியாக உள்ள அனைத்து படங்களை ஓடி ஓடி வாங்குகிறார்கள். அமுல் நிறுவனத்தில் வரும் லாபத்தில் 82 சதவீதம் விவசாயிகள் சென்று அடைகிறது. ஆனால் ஆவின் நிறுவனம் இப்படி செய்யவில்லை. அதனால் ஆவின் நஷ்டத்தில் செல்கிறது. பால் உற்பத்தியில் வரும் லாபம் விவசாயிகளை சென்றடைய வேண்டும். இதனையடுத்து முதல்வருக்கு எப்படியாவது பிரதமர் நரேந்திர மோடியாக மாறிவிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. மோடியாக மாற வேண்டும் என்றால் குடும்ப உறுப்பினர்களை யாரையும் அருகில் விடக்கூடாது. கை சுத்தமாக இருக்க வேண்டும். அதற்கு ஒரு தகுதி, திறமை, கடவுள் அருள் வேண்டும். மேலும் தமிழக முழுவதும் பெரிய நம்பிக்கை வைத்துள்ளோம். ஒவ்வொருவரும் பிரதமர் மோடியாக தன்னை உணர்ந்து பணியாற்றினால் நிச்சயம் வெற்றி நம் பக்கம். நேரம் வந்துவிட்டது தமிழகத்தில் மாற்றம் வரப்போகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.