தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக கடந்த வாரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் இன்னும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பாதுகாப்பிற்காக இடிக்க வேண்டிய பள்ளி கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் வகுப்பறை வசதிகள் இல்லாமல் வளாகத்தில் நடைபெறும் வகுப்புகள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.