தமிழக பள்ளிக்கல்வித்துறை நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் ஒரு மாணவரை ஒருநாள் தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மலைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மாணவர் ஒருவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் தருண் ஆனந்த் என்ற மாணவர் ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமிக்கப் பட்டார். இந்த மாணவருக்கு தலைமை ஆசிரியர் செய்ய வேண்டிய பணிகள் குறித்த அனைத்து வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் மாணவர் தருண் ஆனந்த் காலையில் இறைவழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு அனைத்து மாணவர்களையும் பள்ளிக்கு தாமதம் இன்றி வருமாறு அறிவுறுத்தினார். இதனையடுத்து ஆசிரியர்கள் அனைவருக்கும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கியதோடு, ஆசிரியர்கள் வருகை பதிவேடு மற்றும் மாணவர்கள் பதிவேடு போன்றவற்றை சரிபார்த்தார். இதைத்தொடர்ந்து மதிய நேரத்தில் பள்ளி வளாகத்தை ஆய்வு செய்ததோடு, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கினார்.
இது தொடர்பாக தருண் ஆனந்த் கூறியதாவது, நான் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்ததில் ஆசிரியர்களின் வேலைகள் குறித்து என்னால் அறிய முடிந்தது. அதோடு பள்ளியின் வேலைகள் மற்றும் ஆசிரியர்கள் எதிர் கொள்ளும் சவால்கள் போன்றவற்றையும் நன்கு தெரிந்து கொண்டேன். இது மாணவர்கள் மத்தியில் குறைந்து வரும் நிர்வாக மேலாண்மை திறனை மீட்டெடுப்பதற்கு ஒரு நல்ல வழி ஆகும். மேலும் இந்த வாய்ப்பை தந்ததற்கு பள்ளிக்கல்வித்துறைக்கும் என்னுடைய பள்ளியின் தலைமை நிர்வாகத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.