தற்போது செல்போன் மூலமாக பல்வேறு வகையான மோசடிகளும் அரங்கேறி வருகிறது. ஏதாவது ஒரு லிங்கை கிளிக் செய்யுங்கள் என்று கூறி அதன் மூலமாக மொத்த பணத்தையும் திருடி விடுகிறார்கள். இது போன்ற குற்ற சம்பவங்களிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க TRAI அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தொலைபேசியில் நாம் பெயர் பதிவு செய்து வைத்திருந்தால்தான் கால் செய்பவரின் பெயரை திரையில் காட்டப்படும். அப்படி பதிவு செய்யாத நம்பரில் இருந்து வரும் அழைப்புகள் unknown நம்பர் என்று காட்டப்படும். இதனால் தேவையற்றவர்களுடைய அழைப்புகளை நாம் எடுக்க வேண்டிய சூழல் உள்ளது.
இதை தடுக்க ட்ரூ காலர் செயலி தனியாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். இந்த நிலையில் இனி தனியாக ட்ரூகாலர் தேவைப்படாமல் தொலைபேசி எண் பெறும்போது வழங்கும் தகவல்களை கொண்டு கால் செய்பவரின் பெயர் திரையில் காண்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொலைத்தொடர்புத்துறை தெரிவித்துள்ளது. இதற்கான பணிகளை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் TRAI உத்தரவு பிறப்பித்துள்ளது.