அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் தேர்வு முடிவுகளில் வெளிப்படை தன்மையை கடைபிடிக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் தமிழகத்தில் காலியாக இருக்கும் அரசு பணியிடங்கள் மற்றும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் இதுவரை 10 விழுக்காடு பணியிடங்களை கூட நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு தேர்வு பணியாளர் அமைப்பு குரூப் 2, 2ஏ தேர்வினை 5529 பணியிடங்களுக்காக நடத்திய நிலையில், அண்மையில் ரிசல்ட் வெளியாகியுள்ளது. இதில் மாணவர்களின் தேர்ச்சி விவரம் மட்டுமே வெளியான நிலையில் மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றார்கள் என்று விவரத்தை வெளியிடவில்லை. இந்த தேர்வு எழுதியவர்களில் 60,000 பேர் பிரதான தேர்வு எழுதுவதற்கு தகுதியுடையவர்கள் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.
ஆனால் தேர்வில் எடுத்த மதிப்பெண் விவரத்தை வெளியிடாததால் தேர்வு எழுதியவர்கள் மிகுந்த கவலையில் இருப்பதோடு தாங்கள் எடுத்த மதிப்பெண் தெரிந்து கொண்டால் அடுத்த முறை அதற்கு தகுந்தார் போன்று தேர்வுக்கு தயாராகிக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் ரிசல்ட் வெளியாகும் போதே ஒவ்வொருவரும் எடுத்த மதிப்பெண் விவரமும் சேர்ந்து வெளியாகும். ஆனால் தற்போது தமிழகத்தில் மாணவர்களின் மதிப்பெண் விவரத்தை வெளியிடாததோடு முதல் நிலை தேர்வு என்பதால் மதிப்பெண் விவரத்தை வெளியிடவில்லையா என்பதும் எனக்கு தெரியவில்லை.
தேர்வில் பெற்ற மதிப்பெண் விவரத்தை வெளியிடாதது தேர்வு எழுதியவர்கள் மத்தியில் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாணவர்கள் பெற்ற தேர்வு மதிப்பெண்களை வெளியிடுவது தான் பொருத்தமான ஒன்றாக இருக்கும். மேலும் இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை வெளியிட நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் தேர்வுகளிலும் மதிப்பெண் விவரத்தை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் முடிவுகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்க திமுக அரசை வலியறுத்தல்! pic.twitter.com/j4NeqUV04E
— O Panneerselvam (@OfficeOfOPS) November 16, 2022