10- ஆம் வகுப்பு மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி அஞ்சுகம் காலனியில் கொத்தனாரான கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகன் வாசு அரசு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல டியூஷனுக்கு சென்ற வாசு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் டியூஷனுக்கு சென்று கேட்ட போது வாசு டியூசனுக்கு வரவில்லை என ஆசிரியர் கூறியுள்ளார்.
இதனால் பெற்றோர் வாசுவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதற்கிடையே காந்திகிராமம் அருகே இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது முகம் சிதைந்த நிலையில் கிடந்த சடலத்திற்கு அருகே புத்தகப்பை கிடந்தது. இதனையடுத்து பையில் இருந்த ஆதார் அட்டையை எடுத்து பார்த்தபோது இறந்து கிடந்தவர் காணாமல் போன வாசு என்பது தெரியவந்தது. இதனை அறிந்த வாசுவின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் காலாண்டு தேர்வில் வாசு 4 பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. அவர் அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் பெற்றோர் வாசுவை கண்டித்துள்ளனர். நேற்று முன்தினம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த வாசு செல்போனை பயன்படுத்தியுள்ளார். இதனை பார்த்த பெற்றோர் வாசுவை மீண்டும் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் வாசு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.