சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் மேற்கு பகுதியில் விவேக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாயாரின் வீட்டு இரண்டாவது தளத்தில் இருக்கும் கட்டிடத்திற்கு புதிதாக கூடுதல் மின் இணைப்பு கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் விவேக்குமார் முகப்பேர் மேற்கு பகுதியில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று என்ஜினீயரான கோதண்டராமனை சந்தித்துள்ளார். அப்போது புதிய மின் இணைப்பு கொடுப்பதற்கு கோதண்டராமன் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விவேக்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கோதண்டராமனிடம் கொடுக்கும் போது போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கோதண்டராமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.