கொரோனா வைரஸ் பாதிப்பில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தவர் 5 நாளில் உயிரிழந்தது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உலகிற்கே மரண பயத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட ஒவ்வொரு நாடுகளும் போராடி வருகின்றன. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கையும் , மரண எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கொரோனா குறித்து நாளுக்கு நாள் எழுந்து வரும் தகவல்கள் மக்களிடையே மேலும் பீதியை கிளப்பியுள்ளது.
அண்மையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் தனிமைப்படுத்தப்பட்டு , முறையான சிகைச்சையால் குணமடைந்தும் ஐந்து நாட்கள் கழித்து மரணமடைந்த சம்பவம் கொரோனாவின் தாக்கத்தின் கொடூரத்தை உணர்த்தியுள்ளது. மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் தான் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.
சீனாவின் ஹன்யாங் மாவட்டத்தில் உள்ள குபா தற்காலிக மருத்துவமனையில் 36 வயதான லிலியாங் என்பவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் 13 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டு , தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார். பின்பு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் பூரண குணமடைந்தார். பரிசோதனையில் அவரின் உடல் நிலை சாதாரணமான வெப்பநிலையுடன் இருந்தது.
கொரோனா வைரஸில் இருந்து சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்தவர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் வைத்து கண்காணிக்கப்பட்டனர். அப்போது இவருக்கு திடீரென்று சுவாச கோளாறு ஏற்பட்டது. இதனால் மார்ச் 2-ஆம் தேதி மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இறப்பு சான்றிதழ் லிலியாங்கின் மனைவி மெய்யிடம் வழங்கப்பட்டது. அதில் அவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பில் பூரண குணமடைந்து சென்றவர் இறந்தது புது அதிர்ச்சியை உருவாகியுள்ளது. இதனால் மருத்துவமனையில் நோயாளிகளை கூடுதல் காலம் வைத்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.