டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த ஐசிசி டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது. உலகக் கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கணிக்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் ஒரு விக்கெட்டை கூட எடுக்கமுடியாமல் இங்கிலாந்து அணியிடம் ஒரு படுதோல்வியடைந்ததால் ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்தது. இதையடுத்து இந்திய அணி அடுத்த கட்டமாக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறது.
இதில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆன முதல் டி20 போட்டி வரும் 18ஆம் தேதி வெலிங்டனில் நடைபெற உள்ளது. இதில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல் ராகுல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் டி20 வடிவிலான இந்திய அணியை ஹர்திக் பாண்டியா தலைமை வகிப்பார் என உலககோப்பைக்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வு கமிட்டி தலைவரும், தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான ஸ்ரீகாந்த் பேட்டி அளித்துள்ளார். அதில், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை டி20 போட்டிகளில் முழு நேர கேப்டனாக நியமனம் செய்ய வேண்டும், நான் தேர்வு கமிட்டி தலைவராக இருந்தால் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் இருப்பார் என நேரடியாக சொல்லியிருப்பேன். இப்போதிலிருந்து அடுத்த டி20 உலக கோப்பை போட்டிக்கு அணியை தயார் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்..
மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்வதே சிறப்பாக இருக்கும். எனவே இதனை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா அணிக்கு அதிக வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் அவசியம். 1983 ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை மற்றும் 2007 ஆம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் நாம் எப்படி வெற்றி பெற்றோம் என்று பாருங்கள். அப்போதெல்லாம் அணியில் கணிசமான அளவில் வேகபந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் இருந்தனர். எனவே அத்தகைய வீரர்களை நாம் அடையாளம் கண்டு அணியில் சேர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.