சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில் வைத்து சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எனவே பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டியது நம்முடைய கடமை. உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து சென்னையில் அமைய வேண்டும். அதன்பிறகு பொது போக்குவரத்து என்பது சிறப்பான முறையில் கட்டமைக்கப்பட வேண்டும்.
அப்படி செய்தால் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு சுற்றுச்சூழலும் பெரிய அளவில் மாசுபாடு அடையாது. எனவே பணிகளை ஒருங்கிணைத்து முறையாக திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் சிரமம் இன்றி சென்று வர முறையான போக்குவரத்து வசதிகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் சென்னையில் ஒரே பயண சீட்டை பயன்படுத்தி மாநகர் பேருந்துகள், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்கள் போன்றவைகளில் பயணிக்கும் வசதி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.