தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை, எனவே மக்கள் பீதியடைய வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சீனாவில் இருந்து தொடங்கி தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சீனாவில் 3000-த்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் இதுவரை 30 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தமிழகத்திற்கு வராமல் இருக்கும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை என்றும் கொரோனா குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா எதிரொலியாக விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளை ஆய்வு செய்ய நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.
கொரோனா பாதிப்பை தடுக்க மக்கள் நன்றாக கை கழுவ வேண்டும். காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் இருந்தால் மருத்துவர்களை அணுகவும். 1,200க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு தனி வார்டு அமைக்க அறிவுறுத்தபட்டுள்ளது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும், அச்சப்பட தேவையில்லை என்றும் தமிழகத்தில் முக கவசம் அணியவேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.