தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் அக்டோபர் 19 முதல் 29 வரை நடைபெற்றது. அரசு பள்ளி மாணவர்களுக்கான ஏழு புள்ளி ஐந்து சதவீத இட ஒதுக்கீட்டில் 565 இடங்கள் நிரப்பப்பட்டன. முதற்கட்ட கவுன்சிலிங் இட ஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து உள்ளனர். இந்நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
முதல் சுற்றில் இடங்களை பெற்றவர்கள் தங்கள் கல்லூரிகளை மாற்றிக் கொள்ளவும் இரண்டாம் சுற்றில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான இணைய வழியில் விண்ணப்ப பதிவை நாளை வரை பதிவு செய்யலாம். நவம்பர் 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி மாலை 5 மணி வரை விருப்பமான இடங்களை தேர்வு செய்யலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. நவம்பர் 24 ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு tnhealth.tn.gov.in, tnmedicalselection.net ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.