இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு 31 வருடங்களாக சிறையில் இருந்தனர்.
கடந்த மே மாதம் வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பேரறிவாளனை நன்னடத்தை மற்றும் நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இதன் காரணமாக நளினி மற்றும் முருகன் உட்பட 6 பேரும் பேரறிவாளனை போன்று தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்த போது தமிழக அரசு 6 பேரின் நன்னடத்தை குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
இதன் காரணமாக நளினி உட்பட 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதற்கு காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சி தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் வரவேற்பு கொடுத்துள்ளது. இந்நிலையில் 6 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.