Categories
தேசிய செய்திகள்

டெல்லி கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி – மாநிலங்களவை மார்ச் 11ம் தேதி வரை ஒத்திவைப்பு!

உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக‌க்கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை மார்ச் 11ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று அவை கூடியதும் டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். இதனால் மாநிலங்களவை மார்ச் 11ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு திங்கள், செவ்வாய் கிழமை விடுமுறைக்கு பின் புதன்கிழமை மாநிலங்களவை கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக கோரி எதிர்கட்சியினர் அவை தொடங்கிய நாள் முதல் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக‌க்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங். எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

Categories

Tech |