திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொசவபட்டி பகுதியில் சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாணார்பட்டியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் வர்த்தக முகவராக வேலை பார்த்து வருகிறார். தினமும் சரவணகுமார் வங்கியில் இருந்து பணம் எடுத்து பால் முகவர்கள், 100 நாள் வேலை செய்பவர்கள், முதியோர் உதவித்தொகை ஆகியவற்றை வழங்கி வருகிறார்.
நேற்று காலை வழக்கம் போல சரவணகுமார் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துவிட்டு டீக்கடையில் டீ குடித்துள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த சரவணகுமார் உடனடியாக சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.