Categories
தேசிய செய்திகள்

யெஸ் வங்கி (YES BANK) NO வங்கியானது – ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு குறித்து ராகுல் காந்தி விமர்சனம்!

யெஸ் பேங்க் நிர்வாகம் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் அதன் வாடிக்கையாளர்களுக்கு பண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தி ட்விட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

யெஸ் பேங்க்கை ரிசர்வ் வங்கி தனது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்து வைப்புத் தொகைக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் யெஸ் பேங்க்கின் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிட ரிசர்வ் வங்கி , ஏப்ரல் 3 ஆம் தேதி வரை யெஸ் வங்கிக்கு எதிராக எந்தவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க முடியாது என தெரிவித்துள்ளது. இந்த ஒரு மாத காலத்திற்கு யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது வாடிக்கையாளர் தங்கள் கணக்கில் இருந்து ரு.50,000 வரை மட்டுமே பணம் எடுக்க முடியும். மருத்துவம், கல்வி, திருமணம், தவிர்க்க முடியாத அவசர தேவைகளுக்கு மட்டும் வங்கி மேலாளரின் அனுமதியுடன் ரூ.5 லட்சம் வரை பணம் எடுக்கலாம். ரூ.50,000-த்துக்கு மேல் EMI கட்டுபவர்கள் பணம் செலுத்தும் நிறுவனத்திடம் ஒரு மாத கால அவகாசம் கோரலாம்.

வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களின் பணத்திற்கும், அதற்கான வட்டிக்கும் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது, அதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியின் பங்குகள் மதிப்பு 60% வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் யெஸ் பேங்க் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதால் போன் பே பாதிப்படைந்துள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, யெஸ் (YES) வங்கி, NO வங்கியானது என குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியும் அவரது கொள்கைகளும் இந்தியாவின் பொருளாதாரத்தை சிதைத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். வாராக்கடன் அதிகரித்து யெஸ் வங்கி திவாலாகும் நிலைக்கு சென்றுவிட்டது குறித்து ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |