கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 2 மருத்துவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்தது உயர்நீதிமன்றம்..
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனையான மாணவி பிரியாவுக்கு கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தவறான முறையில் சென்றதன் காரணமாக கடந்த 15 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பால் ராம்சங்கர் மற்றும் சோமசுந்தரம் ஆகிய இரண்டு மருத்துவர்கள் மீது காவல்துறையினர் பணியின்போது கவனக்குறைவாக செயல்பட்டு மரணம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் டாக்டர்கள் இருவரும் தலைமறைவாக இருப்பதாகவும் அவர்களை காவல்துறையினர் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்த நிலையில், தங்களுக்கு முன் ஜாமின் வழங்க கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இருவரும் தாக்கல் செய்திருந்த மனுவில், இதுபோன்ற மூத்த மற்றும் இடுப்புமாற்று அறுவை சிகிச்சைகள் பல செய்திருப்பதாகவும், அந்த நோயாளிகள் அனைவரும் நன்றாக இருக்கக்கூடிய நிலையில், இந்த மாணவி மட்டும் உயிரிழந்திருப்பது தங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை ஏற்படுத்தியிருப்பதாகவும், உயிரிழந்த குடும்பத்திற்கு என்ன மாதிரியான இரங்கல் சொல்வது என்ற அவல நிலையில் தாங்கள் இருப்பதாகவும், தாங்கள் எந்த தவறும் இழைக்கவில்லை எனவும், அவர்கள் அந்த முன் ஜாமின் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்..
மேலும் இந்த வழக்கில் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு முன்பு ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க இருப்பதாகவும், ஆகவே தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த மனு இன்றைய தினம் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்த போது, ஆஜரான மருத்துவர் தரப்பு வழக்கறிஞர், எங்களுக்கு ஏராளமான மிரட்டல்கள் வருகிறது. தாங்கள் இல்லாத நிலையில் தங்களது குடும்பத்தினரை அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து விசாரணைகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பதாகவும் சாட்சிகளை கலைக்க மாட்டோம்.
எனவே தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் நீதிபதி, இந்த விவகாரம் தற்போது தான் நடந்து கொண்டிருக்கிறது, விசாரணை சென்று கொண்டிருக்கக்கூடிய நிலையில் உங்களுக்கு எதற்கு முன் ஜாமின் வழங்க வேண்டும். நீங்கள் விசாரணை கமிட்டி முன்பு ஆஜராகி உங்கள் தரப்பு விளக்கத்தை அளியுங்கள் என்று தெரிவித்தார்.
பின் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர், தங்களுக்கு நூற்றுக்கணக்கான மிரட்டல்கள் வருகின்றன, உயிருக்கு அச்சுறுத்தல் எல்லாம் வருகிறது. தாங்கள் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைவது பெரும் சவாலாக இருக்கிறது. எனவே தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். அதற்கு நீதிபதி எந்த நிவாரணமும் வழங்கப் போவதில்லை, நீங்கள் வேண்டுமானால் சரணடையுங்கள் உங்களுக்கு வேண்டுமானால் பாதுகாப்பை காவல்துறையும், அரசும் வழங்கும் என்று தெரிவித்தார்கள்.
இதனையடுத்து இருவருக்கும் முன்ஜாமின் வழங்க மறுத்த நீதிபதி வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார். இந்த மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும் மருத்துவர்களின் குடும்பத்தினரை துன்புறுத்த கூடாது என்றும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, இந்த மருத்துவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி தற்போது 2 மருத்துவர்களுக்கும் எந்த நிவாரணமும் வழங்க முடியாது, அதாவது முன் ஜாமீன் வழங்க முடியாது என கூறி வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்.. இரண்டு மருத்துவர்களும் சரணடையுமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் நீதிபதி..