வேலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள எல்லப்பாளையம் பகுதியில் தவமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது கணவர் மூலம் கோவையைச் சேர்ந்த ஒருவரிடம் கடந்த 2020-ஆம் ஆண்டு ஒருவர் எனக்கு அறிமுகமானார். அவர் அமைச்சர் ஒருவரை நன்கு தெரியும் எனவும், கட்சியில் பொறுப்பாளராக இருப்பதாகவும் கூறினார். இதனையடுத்து தேர்வுகள் இல்லாத நேரடி நியமன அரசு பணிகளை தனக்கு தெரிந்த அதிகாரிகள் மூலம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார்.
அதனை நம்பி கலெக்டர் அலுவலகத்தில் பதிவு எழுத்தர் பணிக்காக கடந்த 2020-ஆம் ஆண்டு அவரிடம் 8 லட்ச ரூபாயை கொடுத்தேன். பின்னர் கொரோனாவை காரணம் காட்டி எங்களுக்கு பின்னர் பணி நியமன ஆணை வழங்கப்படும் என அவர் கூறினார். ஆனால் அவர் கூறியபடி பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. என்னைப் போலவே தம்பி, தங்கை உறவினர்கள் என 19 பேரிடம் அவர் 93 லட்சம் வரை வாங்கி மோசடி செய்ததோடு, கொலை மிரட்டல் விடுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.