டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவை நீக்கி உத்தரவிட்டது பிசிசிஐ..
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), சேத்தன் சர்மா தலைமையிலான முழு தேர்வுக் குழுவையும் வெள்ளிக்கிழமை மாலை (நவம்பர் 18) நீக்கியுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை 2022ல் இந்தியா படுதோல்வியடைந்து வெளியேறியதே பிசிசிஐ எடுத்த இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம். சூப்பர் 12 குழு-நிலை ஆட்டங்களில் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய போதிலும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அரையிறுதி சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் மட்டமான தோல்வியை சந்தித்தது. இது இந்திய ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தை சந்தித்தது.
கடந்த செப்டம்பரில் 2022 ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றோடு இந்தியாவெளியேறியது, எனவே, நிர்வாகத்தில் சில பெரிய மாற்றங்கள் பிசிசிஐயிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்டது. 2021 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு இந்தியா செல்லத் தவறியதால், தேர்வுக் குழுவில் மாற்றம் ஏற்படும் என்றும் சிலர் கணித்தனர்.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்து வெளியேறிய நிலையில், சேத்தன் சர்மா தலைமையிலான முழு தேர்வுக் குழுவை பிசிசிஐ நீக்கியுள்ளது. அதன்படி தலைவராக இருந்த சேத்தன் (வடக்கு மண்டலம்) ஹர்விந்தர் சிங் (மத்திய மண்டலம்), சுனில் ஜோஷி (தெற்கு மண்டலம்), மற்றும் தெபாசிஸ் மொஹந்தி (கிழக்கு மண்டலம்) ஆகியோர் நீக்கப்பட்டனர். இவர்களை தவிர அபே குருவில்லாவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்துள்ளது. எனவே மொத்தம் 5 பதவிகள் காலியாகவுள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தன், டிசம்பர் 2020 இல் தேர்வுக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
BCCI இப்போது மூத்த ஆண்கள் அணிக்கான தேர்வுக்குழு தலைவர் உட்பட 5 பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என அறிவித்துள்ளது.. அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நவம்பர் 28 ஆம் தேதி வரை காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. தேர்வாளர்கள், வாரியத்தின்படி, “குறைந்தபட்சம் 7 டெஸ்ட் போட்டிகள் அல்லது 30 முதல்தரப் போட்டிகள் அல்லது 10 ஒருநாள் மற்றும் 20 முதல்தரப் போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும்.”
குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பே விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். எந்தவொரு கிரிக்கெட் கமிட்டியிலும் (பிசிசிஐயின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ளபடி) மொத்தம் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்கும் எந்தவொரு நபரும் ஆண்கள் தேர்வுக் குழுவில் உறுப்பினராக இருக்கத் தகுதியற்றவர்.
விண்ணப்பங்களை நவம்பர் 28, 2022 அன்று மாலை 6 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
🚨NEWS🚨: BCCI invites applications for the position of National Selectors (Senior Men).
Details : https://t.co/inkWOSoMt9
— BCCI (@BCCI) November 18, 2022