Categories
மாநில செய்திகள்

கர்நாடகா விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளிப்பதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருக்கும் சீக்கனப்பள்ளி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர், கர்நாடக மாநிலம் தர்மஸ்தாலாவில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டு காரில் இன்று அதிகாலை ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். கர்நாடகாவின் தும்கூர் மாவட்டம் குனிகல் தாலுகாவிலுள்ள ஆவரைக்கல் அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் அதிகாலை 2.30 மணிக்கு வந்து கொண்டிருந்தபோது, சாலையின் மறுபக்கம் எதிர்திசையில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது.

அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே சுமார் அரை அடிக்கும் குறைவான உயரம் கொண்ட மீடியனை தாண்டி வந்து 13 பேர் வந்து கொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் இரண்டு கார்களுமே அப்பளம்போல நொறுங்கியது. இந்த கொடூர விபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த காரில் பயணம் செய்தவர்களில் 1 வயது குழந்தை உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

மேலும் அந்த காரில் இருந்த மூவர் படுகாயமடைந்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய எதிரே வந்த காரில் பயணித்த பெங்களூரைச் சேர்ந்த மூவரும் சம்பவ இடத்தில் பலியாகினர். இந்த சம்பவம் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சம் நிதியும், காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Categories

Tech |