தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா புஷ்பா என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். புஷ்பா படத்திற்கு பிறகு ராஷ்மிகாவுக்கு பாலிவுட் சினிமாவிலும் பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது. நடிகர் அமிதாப்பச்சன் உடன் ராஷ்மிகா இணைந்து நடித்த குட்பை திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், போதிய அளவு வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்கு முன்பாகவே கடந்த 2020-ம் ஆண்டு மிஷன் மஞ்சு என்ற பாலிவுட் படத்தில் ராஷ்மிகா ஒப்பந்தம் ஆகிவிட்டார்.
இந்த படத்தில் சித்தார்த்த மல்கோத்ரா கதாநாயகனாக நடிக்கிறார். சில காரணங்களால் படப்பிடிப்பு தாமதமான நிலையில், படத்தின் ரிலீஸும் தாமதமாகியுள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் மிஷன் மஞ்சு திரைப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஜனவரி 18-ஆம் தேதி ஓடிடி தளத்தில் மிஷன் மஞ்சு திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. மேலும் தமிழில் ரஷ்மிகா நடிக்கும் வாரிசு திரைப்படமும் ஜனவரி மாதத்தில் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.