இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என 92 காலியிடங்கள் குரூப் 1 தேர்வின் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான அறிக்கை ஜூலை மாதம் 21-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து லட்சக்கணக்கானோர் ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர்.
இந்நிலையில் மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 416 பேர் விண்ணப்பித்தனர். இதற்கான முதல் நிலை தேர்வு இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12. 30 மணி வரை 38 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்ட மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 3 லட்சத்து 22 ஆயிரத்து 419 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 957 பேர் மட்டுமே எழுதியுள்ளனர். இந்நிலையில் 1லட்சத்து 31 ஆயிரத்து 457 பேர் தேர்வை எழுத வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.