வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இன்று அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது, இதனையொட்டி இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் கனமழையும், நவம்பர் 21, 22ஆம் தேதிகளில் சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இதனை அடுத்து மழையை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களும் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.