தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய குளம் அருகே ஓபிஎஸ்-ன் பண்ணை வீட்டில் வைத்து அதிமுக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பெரும்பாலானோர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு கூட எங்களுக்கு சாதகமாக தான் வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது அவர் வசம் இருந்த பொதுப்பணி துறையில் பாலங்கள் கட்டும்போது ஏராளமான ஊழல் நடந்துள்ளது. அதோடு ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதிலும் எடப்பாடி பழனிச்சாமி மிகப்பெரிய அளவில் ஊழல் செய்துள்ளார்.
இது குறித்து அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த போது கூட வழக்கை சிபிஐக்கு மாற்ற தேவை இல்லை என்றும், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையே விசாரிக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை எடப்பாடி மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யாததை தமிழக மக்கள் மட்டுமின்றி, திமுக அரசும் விரும்பவில்லை.
எனவே எடப்பாடி மீது விரைவில் வழக்குப்பதிவு செய்து அவரை சிறைக்கு அனுப்ப வேண்டும். நான் பெரிய அளவில் மதிக்கிற, ஓட்டு போடாத மக்களுக்கும் நான் தான் முதல்வர் என்று கூறும் ஸ்டாலின் அவர்கள் இதை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ராஜன் செல்லப்பா போன்ற ஓபிஎஸ் உள்ளிட்ட பலர் மன்னிப்பு கடிதம் வழங்கிவிட்டு மீண்டும் கட்சியில் இணையலாம் என்று சொன்னதாக கூறப்படுகிறது.
விரைவில் சிறைக்கு சென்று அங்கு கட்சி நடத்துபவர்களிடம் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களிடம் மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவை போன்று தற்போது இருக்கும் சூழலில் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக கட்சியை மீட்டெடுப்பார் என்று கூறினார். மேலும் எடப்பாடி மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை பெங்களூரு புகழேந்தி சுமத்தி இருப்பது தற்போது இபிஎஸ் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.