கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டம் சாலக்குடிக்கு வால்பாறையில் இருந்து வனப்பகுதி வழியாக சாலை செல்கிறது. கடந்த சில நாட்களாக இந்த சாலையில் உலா வரும் ஒற்றை காட்டு யானை வாகனங்களை துரத்துவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் சாலக்குடியில் இருந்து வால்பாறை நோக்கி வந்த கேரளா அரசு பேருந்தை யானை துரத்தியதால் ஓட்டுநர் சுமார் 8 கி.மீ தூரம் பின்னோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சாலையில் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன.
எனவே கேரளா வனத்துறையினர் கேரள அரசு போக்குவரத்து கழக பேருந்து தவிர சுற்றுலா வாகனங்கள் உட்பட பிற வாகனங்கள் அந்த சாலையில் செல்வதற்கு தடை விதித்துள்ளனர். மேலும் வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.