தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் கணினி மூலம் கோப்புகள் தயாரிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் திட்டங்களை செயல்படுத்தும் நடவடிக்கைகள் அரசாணைகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் எந்த துறைகளுக்கும் உடனடியாக அரசாணைகள் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் முதலில் அவை குறித்து கோப்புகள் தயாரிக்கப்படும். இந்த கோப்புகள் கீழ்நிலை முதல் மேல்நிலை வரை உள்ள அனைத்து அதிகாரி வரைக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அவர்களிடம் ஒப்புதல் பெறப்படும். இந்த கோப்புகளை தயாரிக்கும் பணிக்காக ஆயிரக்கணக்கான காகிதங்கள் ஆண்டு தோறும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் அரசு துறைகளில் காகிதங்களின் பயன்பாட்டை போக்க மின் ஆளுமை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கோப்புகள் அனைத்தும் கணினி வழியில் உருவாக்கப்படும்.
பின்னர் அவை காகிதங்கள் மூலம் பிரிண் ட் எடுக்காமல் கணினியில் கோப்புகள் தயாரிக்கப்பட்டு அவை அடுத்த நிலை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனால் கோப்புகளை அலுவலக உதவியாளர்கள் எடுத்துச் செல்வதும், அதிகாரிகளிடம் கையொப்பம் பெற காத்து நிற்பது போன்ற தேவையில்லாத செயல்பாடுகள் தவிர்க்கப்படுகிறது. இவை ஏற்கனவே அனைத்து மாவட்டங்களில் உள்ள முக்கிய அரசு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை உயர் அதிகாரி கூறியதாவது. காகிதங்கள் இல்லாமல் கணினி மூலம் கோப்புகளை தயாரித்து கணினி வழியிலேயே அனுப்பும் இந்த திட்டமானது கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைமை செயலகத்தில் உள்ள அரசு துறைகளில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோப்புகள் இதன் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை, வருவாய்த்துறை, கனிம வளத்துறை ஆகிய துறைகளில் கோப்புகள் கணினி மூலம் உருவாக்கப்பட்டு சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு இணையவழியில் அனுப்பி வைக்கப்படுகிறது.மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இருந்து துறை தலைமை என்ற நிலையில் காகிதங்கள் இல்லாமல் கணினி வழி கோப்புகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1.25 லட்சத்திற்கும் கூடுதலான கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு அலுவலகம் இ-ஆபீஸ் எனப்படும் மின் ஆளுமை அலுவலகமாக மாற்றப்பட்டு வருகிறது என அவர் கூறியுள்ளார்.