காவல் துறை மற்றும் திருடர்களுக்கு இடையிலான புது பரிமாணத்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த அதிரடிப்படை தலைமைக் காவலர் வெளிப்படுத்தி இருக்கிறார். 3 சிறார்கள் உட்பட செல்லிடப்பேசி திருடர்கள், பிக்பாக்கெட் கும்பலை வைத்துக்கொண்டு அதன் தலைவனாக அதிரடிப்படை தலைமைக் காவலர் மேகலா ஈஸ்வர் என்ற ஈஸ்வர் பிரசாத் (35) செயல்பட்டுள்ளார். செல்லிடப்பேசி திருட்டு வழக்கில் கைதாகிய 2 குற்றவாளிகளிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் ஈஸ்வர் தலைமையில் வேலை செய்து வருவதை ஒப்புக்கொண்டனர்.
அதன்பின் சிறுவர்களை தவறாக வழி நடத்தி திருட்டு, வழிப்பறி ஆகியவற்றில் ஈடுபடுத்தி வந்த ஈஸ்வர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். பிக்பாக்கெட் உட்பட பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 9 பேரை வைத்துக்கொண்டு, ஹைதராபாத், நல்கொண்டா, சூர்யாபெட் ஆகிய பல பகுதிகளில் ஈஸ்வர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
திருட்டுக் கும்பல் திருடிக்கொண்டு வரும் செல்லிடப் பேசிகளை ஈஸ்வர் எடுத்துக்கொண்டு, அதை விற்று அதில் வரும் லாபத்தை அனைவரும் பகிர்ந்துகொண்டுள்ளனர். இதற்கிடையில் திருடர்கள் சிக்கிக்கொண்டால் தான் உதவுவதாகவும் ஈஸ்வர் கூறியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.