சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் கல்லூரியை இடிக்க கூடாது என மாணவிகள் நடத்திய போராட்டத்துக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துச் சென்றதற்கு என்னை 1 மாதம் சிறையில் அடைத்தார்கள். சிறையில் இருந்து வாடினேன் என்று சொல்ல மாட்டேன், வாடவில்லை, மகிழ்ச்சியாக தான் இருந்தோம். என் வாழ்வில் அப்படிப்பட்ட ஒரு முக்கியமான இடத்தை பிடித்த இடம் தான் இந்த ராணி மேரி கல்லூரி என்பதை மீண்டும் மீண்டும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இத்தகைய புகழ் பெற்ற இந்த ராணி மேரி கல்லூரியில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் மாளிகை கட்டப்பட்டது. கடந்த கால ஆட்சியாளர்கள் கலைஞர் என்ற அந்த பெயரை நீக்குனாங்க, அதனை மீண்டும் இப்போது நாம் சூட்டி இருக்கிறோம். கட்டடங்களில் இருக்கின்ற பெயரை நீக்குவதால் கலைஞர் பெயரை மக்கள் மனதில் இருந்து யாராலும் நீக்கி விட முடியாது. அது வேறு, அது அவர் கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம் பிடித்தவர். அவரால் பயன்பெற்ற மாணவர்களின் உணர்வில் அவர் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அத்தகைய பெருமைக்குரிய கலைஞர் பெயரால் மாளிகை அமைந்திருக்கும் இடம்தான் இந்த ராணி மேரி கல்லூரி. பெருமை மிகு இந்த கல்லூரியின் 104 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உங்களுக்கு பட்டங்களை வழங்குவது எனக்கு கிடைத்த பெருமை. 21 துறைகளைச் சார்ந்த 3,259 மாணவிகள் பட்டம் பெறுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பது தான் எனக்கு இரட்டடிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.