சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, எனது கனவு திட்டங்களில் ஒன்றான புதுமைப்பெண், உயர்கல்வி உறுதித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் இந்த ஆண்டு ராணி மேரி கல்லூரியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டில் பயிலக்கூடிய 1,039 மாணவிகள் இதனால் பயன்பெற்று இருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது நான் மிகப்பெரிய பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த ஆண்டு முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவியரும் இந்த திட்டத்தின் மூலமாக பயன்பெற உள்ளனர். புதுமைப் பெண் திட்டத்தின் காரணமாக இக்கல்லூரியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்ற தகவலும் தொடர்ந்து எனக்கு வந்துகிட்டு இருக்கு, அது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. அப்படி தங்களது கல்லூரி கனவை நினைவுபடுத்தி கொள்ள வரக்கூடிய மாணவிகள் இந்த கல்லூரியில் தங்கி படிப்பதற்கு வசதியாக விடுதி ஒன்றை ஏற்படுத்து தர வேண்டும் என்று இந்தக் கல்லூரி நிர்வாகத்தின் உடைய கோரிக்கையாக இருப்பதை நான் அறிந்தேன்.
எனவே மாணவியர்கள் தங்கி பயில ஏதுவாக கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே விடுதி கட்டித் தரப்படும் என நான் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த மே 25ஆம் நாள் அன்று இதே ராணி மேரி கல்லூரியில் நடந்த மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழா மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் விழாவில் நான் கலந்து கொண்டேன். நான் மட்டும் முதல்வன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதாது.
நீங்கள் ஒவ்வொருவரும் நான் முதல்வன், நான் முதல்வன் என்ற சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத்தான் அந்தத் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். வேலைக்கான ஆட்களை உருவாக்க திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகிறோம். இதனை இன்றைய தலைமுறை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.