முறையான சிகிச்சை அளிக்காததால் தன் வலது காலை இழந்த பேருந்து ஓட்டுனர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் வடக்கூர் மேலத்தெருவில் வசித்து வரும் ஜோதி என்பவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த மாதம் 4ஆம் தேதி ஜோதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் அவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ஜோதிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் அவருக்கு கால் வலி குணமடையாததால் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்போது மருத்துவர்கள் ஜோதிக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என கூறி காலில் இருபுறமும் உள்ள சதையை கிழித்து கட்டுபோட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த கட்டை கழட்டும் போது ஜோதியின் கால் தசைபகுதி கெட்டுப்போனதாகவும், காலின் செயல்திறன் குறைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜோதி மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு பரிசோதனை செய்தபோது ஜோதியின் கால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது எனக்கூறி வலது காலை அகற்றியுள்ளனர். எனவே மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்ததால் தான் காலை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஜோதி தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு தகுந்த இழப்பீடு வழங்ககோரியும், இதுபோல் வேறு யாருக்கும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஜோதி சக்கரநாற்காலியில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார்.