2 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் கார் ஓட்டுநரான கதிரவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிங்காநல்லூரில் வசிக்கும் பிரான்சிஸ் சேவியர் செல்வராஜ் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் செல்வராஜ் தான் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பொது மேலாளராக வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார். இதனால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு கார் ஓட்ட அனுமதி அளிக்குமாறு கதிரவன் கேட்டதற்கு 2 1/3 லட்ச ரூபாய் செலவாகும் என செல்வராஜ் கூறியுள்ளார். இதனை நம்பிய கதிரவன் 2 1/2 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார்.
ஆனால் நீண்ட நாட்களாகியும் செல்வராஜ் ஒப்பந்தத்தை கொடுக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கதிரவன் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது செல்வராஜ் வேலை வாங்கி தருவதாக கூறி 100-க்கும் மேற்பட்டவர்களிடம் 2 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளார். மேலும் மோசடி செய்த பணத்தில் செல்வராஜ் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது.