இன்று சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு பிராத்தனைகள் நடைபெறும்.
ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும். இதன் மூலம் கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குறையும். சாதாரண பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்வதால் ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும்.
நாள் முழுக்க உண்ணாமல் இருந்து நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை கூறியபடி பிரதோஷ காலத்தில் சிவபெருமானோடு தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் சகல விதமான நன்மைகளும் வந்து சேரும். சனி மகாபிரதோஷ நாளில் நாம் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும். பஞ்சமா பாவங்களும் நீங்கி சிவன் அருள் கிடைக்கும்.
விரதத்தின் மகிமைகள் :
- பெருமாளுக்கு உகந்த நாள் ஏகாதசி, சிவனுக்கான நாள் திரயோதசி, சிவராத்திரி. அமாவாசை நடந்து 13வது நாள் இந்த நாளே பிரதோஷ வழிபாடாக சிவ ஆலயங்களில் நடைபெறுகிறது.
- அன்று விரதம் இருப்பதால் நமது உடல் நலம் பெறுகிறது. இதன் மூலம் வாயுக்கோளாறு, வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். உடல் நிலை, மனநிலை சீராகும். மன அழுத்தம் குறையும்.
- பிரதோஷ வேளையில் நந்தியம் பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்யலாம்.
- சனிப்பிரதோஷ நாளில் மாலையில் சிவன் நந்தியை தரிசிக்கும் வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். விரதம் இருந்தால் சகல செளபாக்கியங்களும் கிடைப்பதோடு, இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும்.
- அதோடு சனிப்பிரதோஷ நாளன்று செய்யப்படும் அனைத்து தானங்களினாலும் அளவற்ற பலன்களைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை. பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.
நந்தி வழிபாடு :
- திரயோதசி நாளில் பிரதோஷ நேரத்தன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும். சனிப்பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை.
- சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சிவபெருமானுக்கு பாதுகாவலனாக இருப்பதுதான் நந்தி. சிவனை பார்க்க செல்பவர்கள் அதன் காவலனான நந்தியிடம் தங்கள் குறைகளையும் வேண்டுதல்களையும் சொன்னால் நந்திபெருமான் சிவனிடம் கொண்டு சேர்ப்பார் என்பது நம்பிக்கை. அந்த வேண்டுதல் நிறைவேறவும் செய்யும். நந்தியின் காதில் சொல்லும் நடைமுறை என்பது எல்லா கோவில்களிலும் தற்போதும் இருக்கிறது.