தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் நடித்து வரும் துணிவு திரைப்படமும் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இதனால் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பும், போட்டியும் நிலவுகிறது.
இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் தமிழக வெளியீடு உரிமையை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்ற, துணிவு திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள மொத்தமுள்ள 1100 தியேட்டர்களில் 800 தியேட்டர்கள் துணிவு திரைப்படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல்கள் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. இதனால் வாரிசு படத்தின் கதி என்ன என பலரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.
இதன் காரணமாக தற்போது தமிழ்நாடு திரையரங்குகள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, பொங்கல் பண்டிகையின் போது வாரிசு மற்றும் துணிவு படங்கள் ரிலீஸ் ஆகிறது. இந்த 2 படங்களுக்கும் இதுவரை தியேட்டர்கள் ஒதுக்கப்படவில்லை. எனவே சமூக வலைதளங்களில் யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் இந்த தகவலால் துணிவு திரைப்படத்திற்கு 800 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது வதந்தி என்பது தெரியவந்துள்ளது.