கல்லூரி மாணவர்களுடைய பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்து தமிழக உயர்கல்வி மன்ற அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி, மாணவர்கள் வேலை பெறுவோர் ஆக மட்டுமல்லாமல் வேலை தருவராகவும் மாறும் விதமாக கலை அறிவியல் படிப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கணிதம், இயற்பியல் பாடங்களில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதால் இந்த பாடப்பிரிவுகளில் கணினி அறிவியல் பாடத்தையும் இணைத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல ஒவ்வொரு பாடப்பிரிவிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதற்கான புதிய பாடத்திட்ட வரவு அறிக்கையானது தயாராகியுள்ளது. இந்த அறிக்கை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவற்றை துணைவேந்தர்கள் ஆய்வு செய்து பின்னர் கருத்துக்களை வழங்குவார்கள். அடுத்த வருடத்தில் இருந்து தமிழக அரசின் கீழ் செயல்படும் அனைத்து பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்திலும் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று கூறியுள்ளார்.