சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக வலைதளத்தில் பெண் வழக்கறிஞர் மற்றும் நீதிபதிகளுக்கு எதிராக தவறான கருத்து தெரிவித்த ரியல் எஸ்டேட் அதிபர் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீனை தள்ளுபடி செய்தது. அதன்பிறகு எவ்வித ஆதாரமும் இன்றி நேர்காணலில் youtube சேனல்கள் வெளியிடும் தவறான ஆதாரங்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்ட நீதிபதி, இணையதள குற்றங்களை கவனிக்க சிறப்பு பிரிவை ஒன்றினை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
விளம்பரத்துக்காக யூடியூப் சேனலில் தவறான செய்திகளை வெளியிடுபவர்கள் மீது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக நீதித்துறை தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்த வேண்டிய நேரம் இது எனவும் நீதிபதி காட்டமாக கூறியிருந்தார். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த ரோகித் குமார் என்பவர் பிராங்க் வீடியோ வெளியிடும் 5 யூடியூப் சேனல்களுக்கு எதிராக மத்திய குற்றப் பிரிவு காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களின் உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு இனி வருகிற காலங்களில் பிராங்க் வீடியோ வெளியிடுபவர்கள் மீது வீடியோக்களின் தன்மையை பொறுத்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சில யூடியூப் சேனல்கள் பொதுவெளிகளில் கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் முகம் சுழிக்கும் வகையில் பிராங் செய்வதோடு அவர்களின் அனுமதி இன்றி அந்த வீடியோக்களை யூடியூப் சேனல்களில் வெளியிடுவதன் மூலம் தனிநபர் சுதந்திரம் மற்றும் உரிமை பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணமாகவே இருக்கிறது.