அமைச்சர் பெரிய கருப்பன் தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்ததோடு, பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அதன் பிறகு அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் பல்வேறு விதமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இனிவரும் காலங்களில் அதிக அளவில் சமத்துவபுரங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து துறை செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து முதல்வர் திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அனைத்து துறைகளும் சிறப்பான முறையில் செயல்படுகிறது. அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக 4 வருடங்கள் பணியாற்றியுள்ள நிலையில், அவருக்கு தெரியாத விஷயம் ஒன்றும் கிடையாது.
போகிற போக்கில் ஏதாவது ஒன்றை சொல்ல வேண்டும் என்பதற்காகவே பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார். அதன்பிறகு ஊராட்சிகள், ஒன்றியங்களின் நிதியை திரும்ப அனுப்பும்படி தமிழக அரசு சொன்னதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியது பொய் குற்றச்சாட்டு. இதைக் கூடிய விரைவில் ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டுவோம். மேலும் ஒரு மாநிலத்தின் அமைச்சராகவும், முதல்வராகவும் இருந்தவர் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது எனவும் கூறியுள்ளார்.