தி.மு.க-வில் எம்எல்ஏ-வாக இருந்தவர் டாக்டர் சரவணன். சென்ற சட்டப் பேரவைத் தேர்தலில் மதுரையில் இவர் போட்டியிட எண்ணி இருந்த தொகுதி திமுக-வின் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து கட்சியிலிருந்து வெளியேறி பாஜக-வில் இணைந்தார். இதையடுத்து டாக்டர் சரவணன் பாஜக சார்பில் களமிறங்கி தோல்வி அடைந்தார். எனினும் பாஜக-வில் தொடர்ந்து பயணப்பட்டு வந்தார். இந்த சூழலில் சில மாதங்களுக்கு முன் மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜக-வினர் காலணி வீசினர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் இச்சம்பவம் நடந்த அன்று நள்ளிரவே அமைச்சர் பிடிஆரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து டாக்டர் சரவணன் வருத்தம் தெரிவித்தார். பிடிஆரை நேரில் சந்தித்ததை அடுத்து பா.ஜ.க-விலிருந்து விலகுவதாக சரவணன் அறிவித்தார். இதன் காரணமாக தன் அரசியல் வாழ்க்கையில் அடுத்தது என்ன செய்யலாம் எனும் தீவிர யோசனையில் இருந்த அவருக்கு தன் மகன் திருமணம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதை பயன்படுத்தி கட்சி பேரம் பார்க்காமல் அனைவருக்கும் சரவணன் அழைப்பிதழ் வைத்தார்.
அந்த வகையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ராஜகண்ணப்பன், அதிமுகவைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம் உட்பட அரசியல் பிரமுகர்களில் இருந்து நடிகர், நடிகைகள் வரை திருமணத்தில் பங்கேற்றனர். அதிலும் குறிப்பாக திருமணத்தை பிடிஆர் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதன் காரணமாக திமுக-வில் சரவணன் மீண்டும் ஐக்கியம் மாகலாம் என கணிக்கப்பட்டது. அத்துடன் அதற்கான நடவடிக்கையை அமைச்சர் வாயிலாக சரவணன் செய்து வருகிறார் எனவும் கூறப்பட்டது. அதே நேரம் சரவணனை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர தலைவர் ஸ்டாலினிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காமல் இருந்தது.
இதனிடையில் மகன் திருமணத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் அவர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் முதல்வர் அந்த திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் சரவணனின் மகன் திருமணத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து மடல் அனுப்பி இருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. அந்த வாழ்த்து மடலில், அன்புடையீர் வணக்கம். தங்களின் மண விழா அழைப்பிதழ் பெற்று மன மகிழ்ச்சியடைந்தேன்.
“இயல்பிலான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வருள் எல்லாம் தலை” என அய்யன் திருவள்ளுவர் வகுந்தளித்திருக்கும் இல்வாழ்வின் இலக்கணம் உணர்ந்து, தமிழும் அமுதம்போல், பெரியாரும் பகுத்தறிவும் போல், அண்ணாவும் கற்றலும் போல், கலைஞரும் கழகமும் போல், மணமக்கள் பல்லாண்டு காலம் பலரும் போற்றும் இணையராக இல்லறம் காண விழைகிறேன். மேலும் அனைத்து செல்வங்களும் பெற்று வீட்டுக்கு விளக்காகி, நாட்டுக்கு ஒளியேற்றி வாழ்வாங்கு வாழ்ந்திட என் இதயங்கனிந்த வாழ்த்துகள் என முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.
இப்போது இது குறித்த புகைப்படம் வைரலாகி இருக்கிறது. மேலும் திருமண அழைப்பிதழ் வாயிலாக கட்சியில் மீண்டும் இணைய தூதுவிட்ட சரவணனுக்கு வாழ்த்து மடல் மூலமாக ஸ்டாலின் வரவேற்பு அளித்திருக்கிறார். விரைவில் திமுக-வில் சரவணன் இணையலாம் என்று மதுரை மாவட்ட திமுகவினர் கருதுகின்றனர்.