ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகம் வெறுச்சோடி காணப்பட்டது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் இரண்டு நாட்களுக்கு சிறு விடுப்பு போராட்டமும் அடுத்த மாதம் டிசம்பர் 14ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் ஊழியர்கள் 36 பேர் சிறு விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் அலுவலகத்திற்கு பொறியாளர்கள் உட்பட நான்கு பேர் மட்டுமே வேலைக்கு வந்திருந்தார்கள். இதன் காரணமாக யூனியன் அலுவலகம் அலுவலர்கள் இல்லாமல் வெறுச்சோடி காணப்பட்டது. எந்தவித பணியும் நடக்கவில்லை.