நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீச்சாளர்கள் தங்கள் திட்டங்களைச் செயல்படுத்தத் தவறிவிட்டதாக இந்திய கேப்டன் தவான் தெரிவித்துள்ளார்..
இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் டி20 கிரிக்கெட் தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மழைக்கிடையே 1:0 என்ற கணக்கில்கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது..
அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை குவித்தது.. அதிகபட்சமாக ஷ்ரேயஸ் ஐயர் 80 (76) ரன்களும், ஷிகர் தவான் 72 (77) ரன்களும் சுப்மன் கில் 50 (65) ரன்களும் எடுத்தனர். மேலும் சஞ்சு சாம்சன் 36 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 37 ரன்களும் எடுத்தனர்..நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி மற்றும் லாக்கி பெர்குசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஆடம் மில்னே ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய பின் ஆலன் 22 மற்றும் டெவான் கான்வே 24 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து டேரில் மிட்செல் 11 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். நியூசிலாந்து அணி 19.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் கேன் வில்லியம்சன் மற்றும் டாம் லேதம் இருவரும் ஜோடி சேர்ந்து இந்திய பந்துவீச்சை சிதறடித்தனர்..
கடைசியில் நியூசிலாந்து அணி 47. 1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.. கேன் வில்லியம்சன் 98 பந்துகளில் 94* ரன்களும், டாம் லேதம் 104 பந்துகளில் 19 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 145* ரன்களும் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் நின்று அணியை வெற்றிபெற வைத்தனர்..
இந்திய அணியில் உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.. இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து அணி 1 : 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நவம்பர் 27 ஆம் தேதி ஹாமில்டனில் செடான் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தோல்விக்கு பின் இந்திய கேப்டன் ஷிகர் தவான் தனது பந்துவீச்சாளர்கள் தங்கள் திட்டங்களைச் செயல்படுத்தத் தவறிவிட்டதாகவும், டாம் லாதம் போன்ற ஒரு தாக்குதல் பேட்டருக்கு சரியாக பந்து வீசவில்லை என உணர்கிறார்.
இதுகுறித்து ஷிகர் தவான் பேசியதாவது, ” நாங்கள் 306 ரன்கள் எடுத்ததை பற்றி நன்றாகவே உணர்கிறோம். முதல் 15 ஓவர்களில் பந்து சீமிங் ஆனது. தொடக்கத்தில் நாங்கள் நன்றாக பந்துவீசினோம். மற்ற மைதானங்களை விட இந்த மைதானம் சற்று வித்தியாசமானது. நாங்கள் ஒரு ஷாட் பால் வீசியதால், லேதம் தாக்கினார். மேலும் சில பந்துகளை நாங்கள் தவறாக வீசினோம். ஆனால், நான் சொன்னது போல், நாங்கள் லேதமிற்கு சரியாக பந்துவீசவில்லை, அவர் 40வது ஓவரில் 4 பவுண்டரிகளை அடித்தார், அங்குதான் அவர் அதிரடியாக ஆடினார். அப்படியே ஆட்டம் அவர்கள் பக்கம் மாறியது. இளம்வீரர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக அமையும். அவர்கள் நிறைய கற்றுக்கொள்வார்கள் என்று தெரிவித்தார்.. ஷர்துல் தாகூர் வீசிய 40வது ஓவரில் நியூசிலாந்து அணி 25 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.