முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை குறித்து நாளை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகின்றார்.
இந்தியாவில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் , ஓமனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது.
கடந்த 3 நாட்களுக்கு முன்புகூட தமிழக தலைமைச் செயலாளர் ஒரு சுற்றறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி இருந்தார். அதில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட வேண்டாம். போதுமான தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன ? இனிமேலும் தேவையான நடவடிக்கைகள் என்ன ? என்பது குறித்து தமிழக முதல்-அமைச்சர் நேரடியாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றார். முதலமைச்சர் தலைமையில் நாளை இந்த ஆலோசனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழக சட்டசபை கூட்டத்தொடர் முடிந்தவுடன் இந்த ஆலோசனை என்பது தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.