ரிசப் பண்டை அணியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக சாம்சனை கொண்டு வருவது சரியாக இருக்கும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரீதிந்தர் சிங் சோதி தெரிவித்துள்ளார்..
இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் நேற்று ஆக்லாந்தில் மோதியது.. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஷிகர் தவான், ஷ்ரேயஸ் ஐயர், சுப்மன் கில் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 306 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டாம் லேதம் ஆகிய இருவரின் சிறப்பான ஆட்டத்தால் 47.1 ஓவரில் 3 விக்கெட் இழந்து 309 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
இந்திய அணி 306 ரன்கள் குவித்தும் தோல்வியடைந்தது குறித்து ரசிகர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக இந்திய அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஆட்டம் குறித்து சமூக வலை தளங்களில் எக்கச்சக்கமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.. கடந்த பல தொடர்களாக ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், அவரை அணியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது..
முன்னதாக நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் தொடக்கவீராக களம் இறங்கிய ரிஷப் பண்ட் சொதப்பினார்.. இது மட்டும் இல்லாமல் நடந்து முடிந்த உலகக் கோப்பை மற்றும் அதற்கு முன் உள்ள டி20 தொடர்களிலும் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், நிர்வாகம் அவருக்கு ஏன் மறுபடியும் மறுபடியும் வாய்ப்புகளை வாரி வழங்குகிறது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்நிலையில் ரிஷப் பண்டின் மோசமான ஆட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரீதிந்தர் சிங் சோதி தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் பேசியதாவது, இந்திய அணி நிர்வாகம் ரிஷப் பண்டுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறது. ஆனால் எதையுமே அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவே என்னைப் பொறுத்தவரையில் சஞ்சு சாம்சனை அணிக்குள் கொண்டு வருவதற்கான நேரம் இது. இனிமேலும் சஞ்சு சாம்சனை சேர்க்காமல் தாமதித்து வந்தால் வரும் ஐசிசி தொடர்களை நாம் இழக்க வேண்டியதாக இருக்கும். எனவே அவரை கண்டிப்பாக அணியில் சேர்க்க வேண்டும். ரிஷப் பண்டுக்கு கொடுக்கப்பட்ட நிறைய வாய்ப்புகளை அவர் வீணடித்து விட்டார். தற்போது இந்திய அணியில் புதிய வீரர்களை சேர்ப்பதற்கான நேரம் வந்துள்ளதாக நான் நினைக்கிறேன் என்று கூறினார்.
அதாவது எவ்வளவு வாய்ப்புகளை தான் ஒருவருக்கு வழங்க முடியும், எனவே ரிசப் பண்டை அணியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக சாம்சனை கொண்டு வருவது சரியாக இருக்கும் என வெளிப்படையாக தனது கருத்தை குறிப்பிட்டுள்ளார்.
இவர் சொல்வதைப் போலவே ரிசப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டை பார்த்தால் தேவையில்லாத ஷாட்டுகளை ஆடி வீணாக அவுட் ஆவதையே வாடிக்கையாக வைத்து வருகிறார். அதே நேரத்தில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் கச்சிதமாக பயன்படுத்தி தனது முதிர்ச்சியை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சனை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என இவர் கூறிய கருத்துக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.