கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறி சம்பந்தப்பட்ட பள்ளி பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதோடு, பேருந்துகளும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் பள்ளி மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது பள்ளி நிர்வாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் பள்ளியை திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என பள்ளியை நிர்வகிக்கும் லதா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்த போது தமிழக அரசிடம் பள்ளியை மீண்டும் திறக்க அனுமதிக்கலாமா என்று நீதிபதிகள் கேட்டதற்கு உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு செயல்படும் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாணவி உயிரிழந்த ஏ பிளாக் கட்டிடம் விசாரணைக்கு தேவைப்படும் என்றார். ஆனால் பள்ளி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உயர்நீதிமன்ற உத்தரவின்படி பள்ளி நிர்வாகம் முழுமையாக சீரமைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில் மகளிர் ஆணையம் விசாரித்ததில் புலன்விசாரணையில் குறைபாடுகள் இருப்பதாக கூறியுள்ளதோடு, மாணவியின் தந்தை தரப்பு வழக்கறிஞரும் விசாரணை முடியும் வரை பள்ளியை திறப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று வாதிட்டார். இதன் காரணமாக எதிர் மனுதாரராக சிபிஐ வழக்கில் சேர்க்கப்பட்டதோடு மாணவியின் மரண வழக்கில் எப்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்ற தகவலை சிபிஐ சொல்ல வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கின் விசாரணையை வருகிற 30-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.