சமூக வலைதளமான twitter நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன்பிறகு பிரபலங்கள் மட்டுமே பயன்படுத்தும் ப்ளூடிக் வசதிக்கு மஸ்க் 8 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த அறிவிப்பால் பலர் கணக்கை மூடிவிட்டு வெளியே சென்றபோதும் கூட மஸ்க் தன்னுடைய முடிவில் திட்டவட்டமாக இருந்தார்.
அதன் பிறகு ப்ளூடிக் கட்டண வசதியானது அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் பலரும் கட்டணத்தை செலுத்தி அந்த வசதியை பெற்றுக் கொண்டதால் பிரபலங்களின் பெயரை பயன்படுத்தி பல போலி கணக்குகள் உருவாகியது. இதன் காரணமாக உடனே ப்ளூடிக் நிறுத்தப்பட்டு அதை சரி செய்வதற்கு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தற்போது எலான் மஸ்க் தன்னுடைய டுவிட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ப்ளூ டிக் வசதியுடன் சேர்த்து கோல்ட் டிக் மற்றும் கிரே டிக் போன்றவற்றையும் டுவிட்டரில் மஸ்க் அறிமுகப்படுத்துகிறார்.
இதில் கோல்ட் டிக் அதிகாரப்பூர்வ நிறுவனங்களுக்கும், கிரே டிக் மார்க் அதிகாரப்பூர்வ அரசு நிறுவனங்களுக்கும், ப்ளு டிக் தனிநபர் கணக்குகளுக்கும் வழங்கப்படும். இந்த அப்டேட் டிசம்பர் 2-ம் தேதி நடைமுறைக்கு வந்த பிறகு யாராவது பிரபலங்களின் பெயரை பயன்படுத்தி ஏமாற்றினால் தெரிந்து விடும். மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளால் மீண்டும் டுவிட்டர் நிறுவனத்திற்கு விளம்பரதாரர்களை அழைத்து வருவதற்கு மஸ்க் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.