மறுமுனையில் உம்ரான் பந்துவீசுவது எனக்கு விஷயங்களை எளிதாக்குகிறது என அர்ஷ்தீப் சிங் பாராட்டி பேசியுள்ளார்..
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டி20 தொடரை 1: 0 என்ற கணக்கில் வென்றது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதன்பின் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.
உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஹாமில்டனில் 25 நவம்பர் 2022 அன்று நியூசிலாந்து எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார்கள். வேகப்பந்து வீச்சாளர் உம்ரன் மாலிக் முதல் ஒருநாள் போட்டியிலேயே டெவோன் கான்வே மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரை வீழ்த்தி 10 ஓவர்களில் 66 ரன்கள் கொடுத்து அசத்தினார். ஆனாலும் அந்த போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக உம்ரான் மாலிக் தனக்கு நண்பராக மாறிவிட்டார் என அர்ஷ்தீப் சிங் பாராட்டினார். நவம்பர் 30, 2022 புதன்கிழமை அன்று கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி பார்க் சவுத் மைதானத்தில் மூன்றாவது (இறுதி) ஒருநாள் போட்டியில் தவான் தலைமையிலான அணி நியூசிலாந்தை எதிர்கொள்வதற்கு முன்னதாக அர்ஷ்தீப் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உம்ரான் மாலிக்குடனான தனது பார்ட்னர்ஷிப் பற்றி கூறினார்.
இதுகுறித்து அர்ஷ்தீப் சிங் கூறியதாவது, உம்ரானைச் சுற்றி இருக்கும் விஷயங்கள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன. உம்ரான் மாலிக்குடன் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னைப் போலவே அவருக்கும் ஜோக் அடிப்பது பிடிக்கும். பந்துவீச்சைப் பொறுத்த வரையில், அவரால் எனக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். ஏனென்றால் அவர் 155 கிமீ வேகத்தில் பந்துவீசும்போது, அதனை எதிர்கொள்ளும் பேட்டர்கள் அடுத்த ஓவரில் 135 கிமீ/மணிக்கு நான் வீசும்போது தடுமாறுகிறார்கள்.
மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நாங்கள் மகிழ்ச்சியுடன் செயல்படுகிறோம். இந்த கூட்டணியை களத்திற்கு வெளியேயும் தொடர முயற்சிப்போம். இந்த நட்பை தொடர விரும்புகிறோம். ஒருநாள் போட்டி என்பது ஒரு நீண்ட ஆட்டம், பார்ட்னர்ஷிப்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, பேட்டிங்கைப் போலவே பந்துவீச்சிலும் பார்ட்னர்ஷிப் முக்கியமானது. மறுமுனையில் உள்ள எனது பார்ட்னர் மறுமுனையில் எப்படி பந்துவீசுகிறார் என்பதை நான் சரிபார்க்கிறேன்.
அவர் நன்றாக பந்துவீசும் பட்சத்தில் நான் விக்கெட் எடுப்பதை காட்டிலும் அவருக்கு உதவ நான் ரன்களை கட்டுப்படுத்த (குறைவாக கொடுக்க ) முயற்சிப்பேன். இதனால் அழுத்தம் ஏற்பட்டு யாரேனும் ஒருவருக்கு விக்கெட் கிடைக்கும். ஏனெனில் கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு. நான் எதிரணியை அட்டாக் செய்து பந்து வீசினால் மறுமுனையில் உள்ள எனது பவுலர் கட்டுப்பாடாக பந்துவீசுவார் என தெரிவித்தார்..