மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள தசாளா என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணா ராவூத் (32) என்பவர் தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் சோயா பீன்ஸ், துவரம் பருப்பு மற்றும் உளுந்து ஆகியவற்ற 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிட்டுள்ளார். அதேசமயம் இன்சூரன்ஸ் ப்ரீமியமாக 45 ரூபாய் மற்றும் பயிர் காப்பீட்டாக 200 ரூபாய் செலுத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் பெய்த கன மழை காரணமாக அறுவடைக்கு முன்பே பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.
இதனால் அந்த விவசாயி பிரதமரின் பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் பயிர் இழப்புக்கு விண்ணப்பித்துள்ளார். ஏக்கருக்கு 27 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வரும் என எதிர்பார்த்து இருந்த நிலையில் மொத்தம் இரண்டு ஏக்கருக்கு பயிர் சேதத்திற்கு அவருக்கு ஒரு ரூபாய் 26 காசுகள் மட்டுமே இழப்பீடு தொகை கிடைத்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.