உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி ஹரிஷ் திரிவேதி, பஸ்தி என்ற பகுதியில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். இந்த கார் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது பள்ளி மாணவர்கள் சாலையை கடந்து சென்றுள்ளனர். அப்போது அபிஷேக் என்ற 9 வயது மாணவன் மீது எம்பியின் கார் பயங்கரமாக மோதியதில் மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த மாணவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இது குறித்து அபிஷேக்கின் தந்தை சத்ருகன் ராஜ்பார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தன்னுடைய மகன் மீது எம்.பியின் கார் மோதியது. படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த என்னுடைய மகனை எம்பி மருத்துவமனையில் கொண்டு சேர்க்காமல் அப்படியே கிளம்பி சென்று விட்டார் என்று தெரிவித்துள்ளார். அந்த புகாரின் படி அடையாளம் தெரியாத சில நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.