நாட்டின் தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் போன்ற 4 கட்சிகளும், சென்ற நிதி ஆண்டில் நன்கொடையாகப் பெற்ற நிதி விபரங்களை அறிக்கைகளாக தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்தது. அது தொடர்பான தகவல்களை நேற்று தோ்தல் ஆணையம் வெளியிட்டது. அந்த வகையில் 2021-2022ல் பா.ஜ.க ரூ. 614.53 கோடியை நிதியாக பெற்றுள்ளது. அதேபோல் காங்கிரஸ் ரூபாய்.95.46 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தில் ஆட்சிப்புரியும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி நன்கொடையாக பெற்ற நிதி ரூ. 43 லட்சம் ஆகும். கேரள மாநிலத்தின் ஆளும் கட்சியான மாா்க்சிஸ்ட் ரூபாய்.10.05 கோடியை நன்கொடையாகப் பெற்று உள்ளது. இந்த இரு மாநிலங்களுக்கும் கடந்த 2021ல் மாா்ச்-மே மாதங்களில் பேரவைத் தோ்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தில்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சிப்புரிந்து வரும் ஆம் ஆத்மி கட்சியானது, சென்ற நிதி ஆண்டில் ரூபாய்.44.54 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளதாக தோ்தல் ஆணையத்திடம் தெரிவித்து உள்ளது. தில்லி, பஞ்சாப், கோவா போன்ற 3 மாநிலங்களில் இந்த கட்சி மாநில கட்சிக்கான அந்தஸ்து பெற்றுள்ளது. தனி நபா்கள், நிறுவனங்கள் மட்டுமின்றி தோ்தல் அறக்கட்டளைகளும் கட்சிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றன.
புரூடண்ட் தோ்தல் அறக்கட்டளை பா.ஜ.க-வுக்கு அதிகளவில் நிதியை நன்கொடையாக வழங்கி இருக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், தனி நபா்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து ரூ. 20,000க்கும் மேற்பட்ட தொகையை நன்கொடையாகப் பெறும் கட்சிகள், அது தொடர்பான தகவலைத் தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.